"டெமோகிரசி" புதிய அர்த்தம் கற்பிக்கிறார்
எது பயங்கரவாதம்? அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டங்கள் பயங்கரவாதமா? அல்லது ஜனநாயக போராட்டங்களை அடக்கும் செயற்பாடுகள் பயங்கரவாதமா? அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்க முடியாத அரசாங்கத்தை எதிர்த்தும், வாழ்வாதாரத்தை சுரண்டும் ஆட்சியாளர்களை எதிர்த்தும் மக்கள் வீதிக்கு இறங்கி நியாயம் கேட்டால், அதனை அரச விரோத செயற்பாடாக கருதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுக்கின்றனர் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு சகல தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. ஏன் இந்த போராட்டங்கள்? மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது, நாட்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதன் வெளிப்பாடாகவும், பொறுமை இழந்த மக்கள் தானாக போராட்டத்தில் குதித்ததன் காரணமாகவும் உருவானதே. மாறாக எந்தவொரு வெளி சக்தியினதும் ஆக்கிரமிப்போ அல்லது சட்டவிரோத, பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னணியோ இதில் இருக்கவில்லை. சீர்திருத்தம் குறித்து அரசாங்கம் பலமுறை உறுதியளித்த போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அடுத்து இலங்கை அரசாங்கம் கடுமையான சர்வதேச பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உற்பட பலர் கைது செய்யப்பட்டனர், கடந்த மூன்றுமாதகாலத்தில் 109 கைதுகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே தான் இந்த கைதுகள் குறித்து உள்நாட்டு மனித உரிமை சார் அமைப்புகள், தனி நபர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தூதரகங்கள் என பல்வேறு தரப்பினர் கொந்தளிக்கவும் காரணமாக அமைந்துவிட்டது.
போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவது இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு புதிய வீழ்ச்சியாகும். அரசாங்கம் ஏற்கனவே மிகவும் விமர்சிக்கப்பட்ட ஒரு சட்டத்தை ஆயுதமாக்குகிறது, அது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், “அதிகாரிகள் எந்த விதமான விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை, எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இது இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கட்டமைப்புக்கும் எதிரானது, குறிப்பாக கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் முழுமையாக மழுங்கடிக்கப்படுகின்றன" என சர்வதேச மன்னிப்பு சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் தமது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினர். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் பலரும் கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின் அண்மைக்காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவல்கள் குறித்து கவலையடைந்துள்ளதாகவும், இச் சட்டமானது, மனித உரிமைகளுக்கான மதிப்பிற்கு முரணான விடயம் எனவும், இச் சட்டத்தை பயன்படுத்துவதில்லை என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் பின்பற்றவேண்டும் எனவும் , இது இலங்கையின் ஜனநாயகத்தை முழுமையாக அழித்துவிடும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், நோர்வே தூதுவர் ட்ரைன் எஸ்கடெல், கனடா தூதுவர் டேவிட் மக்கினன் ஆகியோரும் தெரிவித்திருந்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டம், 1979ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போதே, அரசியல் அமைப்பிற்கு எதிரான சட்டம் என அரசாங்கம் கூறியிருந்ததுடன், அதனை நீதி மன்றத்திற்கு அறிவித்து தற்காலிக சட்டமாக ஆறு மாதங்களுக்கு மாத்திரமே எனக் கூறியே நடைமுறைப்படுத்தினர். எனினும் 1982 ஆம் ஆண்டு நிலையான சட்டமாக இது மாற்றப்பட்டதுடன் அன்று தொடக்கம் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக வெவ்வேறு காரணங்களை கூறி இந்த சட்டத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். பிரேமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த, மைத்திரி -ரணில் கூட்டணி, கோட்டாபய என சகல ஆட்சியாளர்களுமே இந்த சட்டத்தை தமக்கு ஏற்றால்போல் பயன்படுத்தினர் என்பதை நிராகரிக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, நாட்டின் சட்டதிட்டங்களுக்கும், சர்வதேச நியதிகளுக்கும் இது முரணானது என தொடர்ச்சியாக சர்வதேசம் வலியுறுத்தியும், அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்தும் கூட, சர்வதேசத்தை சமாளிக்க ஒவ்வொரு பொய்களை கூறிக்கொண்டு இந்த சட்டத்தை உயரிய மட்டத்தில் பயன்படுத்தி அடக்குமுறைகளை கையாண்டனர் என்பதே உண்மை.
இச்சட்டம் கொண்டுவரப்பட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்களே அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டனர். பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற பெயரில் அப்பாவிகள் பலர் தண்டிக்கப்பட்டனர். பலர் இன்றும் சிறைகளில் நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக உள்ளனர். பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் பாய்ந்த சட்டம் இன்று அரசாங்கத்தை எதிர்க்கும் சகலருக்கு எதிராகவும் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றது . உன்மையிலேய அவசரகால சட்டத்தை இப்போது பயன்படுத்த முடியாதுள்ளது, ஏனென்றால் நீதிமன்றம் அதில் அளவுக்கு அதிகமாக தலையிடுகின்றது. ஆகவேதான் அவசரகால சட்டத்தை அவ்வாறே கைவிட்டுவிட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. மிக அழகான சித்திரம் ஒன்றை வரைந்து, அதனை வைத்துகொண்டு நாட்டை அதற்கமைய முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என்ற அரச தலைவர்களின் கதைகளுக்கு இலங்கையில் எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. 1978ஆம் ஆண்டில் இருந்து இலங்கையை கட்டமைக்கும் விதம் குறித்தும் இதற்கு முன்னர் 25 அக்கிராசன உரைகளை நாம் கேட்டுள்ளோம், அந்த வரிசையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆற்றியது 26வது அக்கிராசன உரையாகும். இறுதியாகக் கூட மனித உரிமைகளை பலப்படுத்தும் கதைகளை ரணில் கூறினாரே தவிர அதனை நடைமுறைப்படுத்த தவறிவிட்டார். 2017ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரஸல்ஸ்க்கு சென்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற வாக்குறுதியை கொடுத்து, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல,பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரையிலும் அந்த சட்டம் பயன்படுத்தப்படாது என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. இந்த வாக்குறுதியை நம்பியே ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையையும் கொடுத்தது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருக்கின்ற வேளையில், அவரினால் இடப்பட்ட கையெழுத்தும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதுதான்.
ஆகவே, மனித உரிமை ஆணைக்குழு கூட்டங்களில், இலங்கையின் ஜனாதிபதி ஆசனங்களில் இருப்பவர்களினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றன எனக் கூறி வாதிட்ட நபர் இன்று அதே ஆசனத்தில் இருந்துகொண்டு மனித உரிமைகளை மீறுவது எந்தளவு நியாயமானது என்பதை தாண்டி, இதுதான் ஆட்சியாளர்களின் பண்பா என்ற கேள்வியையும் கேட்க வேண்டியுள்ளது. மிஸ்டர் டெமோகிரசி என இவ்வளவு காலமாகவும் கூறிகொண்டிருந்த ரணில் இன்று அதன் அர்த்தத்தை மாற்றியுள்ளார், அல்லது அதற்கு புதிய அர்த்தம் கற்பிக்க நினைக்கிறார் என்றும் கூறலாம். கடந்த காலங்களில் இருந்தே பயங்கரவாதத் தடைச் சட்டதை நீக்க வேண்டும் என்பதை சர்வதேச நாடுகள் ஆணித்தனமாக வலியுறுத்திக்கொண்டுள்ள நிலையிலும், மனித உரிமைகளை பலப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்து வருகின்ற நிலையிலும், அரசாங்கம் இவ்வாறு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வேட்டையாடுவது ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள எவருமே பயங்கரவாதிகள் அல்ல. அவர்களின் பின்னணியல் எந்த ஆயுத கலாசாரமும் இல்லை, தமது உரிமையை வலியுறுத்தி ஜனநாயக ரீதியில் போராடியவர்களை இவ்வாறு கைது செய்வது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஒரு பக்கம் நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தை நாடவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் நிதி உதவிகளையும் பொருளாதார சலுகைகளையும் பெற்றுக்கொள்ள நாட்டில் பல்வேறு ஜனநாயக மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. மறுபக்கம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இம்முறை இலங்கையை பல்வேறு விதத்திலும் நெருக்கப்போகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் தானாகவே மண்ணை வாரி தலையில் போட்டுக்கொள்கின்றது என்பது வெளிப்படையாக தெரிகிறது. ராஜபக் ஷ அரசாங்கம் மீதான தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மனித உரிமைகளை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் முக்கிய தலைவர் ஒருவர் ஆட்சிக்கு வந்து, அவரும் மனித உரிமைகளை மீறுவதை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது.
Comments
Post a Comment