பலவீனமடையும் இராஜதந்திர உறவு

பலவீனமடையும் இராஜதந்திர உறவு


சீனாவில் இருந்து பிரம்மாண்டமான ஒரு ஆய்வுக்கப்பல்  இலங்கையை நோக்கி வந்துகொண்டுள்ளது, சமுத்திர ஆய்வுகளை தாண்டி விண்வெளி ஆய்வுகளையும் இந்த கப்பல் முன்னெடுக்கும், அதுமட்டுமல்ல நீர்மூழ்கிக் கப்பல்களை கூட இந்த கப்பலால் இயக்க முடியும் என்ற கதைகள் தான் கடந்த இரு வாரங்களாக இலங்கை,இந்திய ஊடகங்களிலும் ஏனைய சர்வதேச ஊடகங்களிலும்  முக்கியச் செய்தி.  அச்சுறுத்தலான சீனக் கப்பலை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது, இல்லை இல்லை சீனா தடைகளை தாண்டி இலங்கைக்கு வரும் என்ற பரபரப்புக்கு குறைவே இருக்கவில்லை. இறுதியாக, கப்பல் வந்துவிட்டது. வழமை போன்று இந்தியா புஸ்வானம் தானா எனக் கூறிக்கொண்டு, சரி இப்போது எல்லாமே முடிந்துவிட்டதே, கையை கொடுத்துவிட்டு கிளம்புவோம் என சென்றுவிட முடியாது. இந்த விவகாரத்தில் மூன்று நாடுகளும் இராஜதந்திர மட்டத்தில் தோலைத் தட்டிக்கொண்டாலும்,  மூன்று தரப்புக்குமே அடி வயிற்றில் பற்றிக்கொண்டு தான் இருக்கிறது.


சீனாவின் இந்த கப்பல் இலங்கைக்குள் வருவதை இந்தியா விரும்பாததற்கு பல்வேறு காரணங்களை இந்தியா கடந்த சில வாரங்களாகவே வெளிப்படையாக தெரிவித்து வந்தது. குறிப்பாக, இந்த கப்பல் வெறுமனே ஆய்வுக் கப்பல் மட்டுமல்ல, எந்த நேரமும் தாக்குதலை நடத்தவோ அல்லது மிக அவசியமான ரகசியங்களை சேகரித்து அனுப்பவோ முடியும். ஆகவே இது ஒரு போருக்கான அறைகூவலாக கூட கருத முடியும். அதேபோல் சீனாவின் சகல நீர்மூழ்கிக் கப்பல்களையும் இயக்கும் திறன் இந்த ஆய்வுக்கப்பலுக்கு உண்டு. அதுமட்டுமா, செயற்கை கோள்களை தாக்கும் திறன் உள்ளதாவும் இந்தியா கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சீனாவோ இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை, அட என்னப்பா நீங்க, இல்லாத பொல்லாத கதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கீங்க.. யுவான் வாங் - 5 கப்பலின் கடல் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவானது தானே. அவை எந்த நாட்டின் பாதுகாப்பையோ, பொருளாதார நலன்களையோ  பாதிக்காதே எனக்கூறி கதையை முடித்துக்கொண்டது சீனா.யுவான் வாங் 5 கப்பலின் வருகை என்பது மூன்று நாடுகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட விவகாரமாகும். இலங்கையில் சீனா நிர்மாணித்த துறைமுகத்திற்கு கப்பல் வருகின்றது என்ற சீன தரப்பின்  நிலைப்பாடுகளை தாண்டி, இந்தியாவின் நியாயப்பாடுகளையும் இலங்கை கேட்டிருக்க வேண்டும்.  இலங்கையின் இந்த தீர்மானம் குறித்து இந்தியா ஆரம்பத்தில் இருந்தே  அதிர்ப்தியை வெளிப்படுத்தி வந்தது, இப்போதும் இந்தியாவின் வேதனை குறைந்தபாடில்லை, சீனாவின் கப்பலினால் இந்து சமுத்திரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள்  இடம்பெற்றால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்ற கோவத்தையும் கொட்டித்தீர்த்துக்கொண்டுள்ளது. இலங்கை தீவு பல்வேறு நாடுகளின் ஒற்றர் தீவு என்ற குற்றச்சாட்டுக்களை இந்தியா நீண்டகாலமாக முன்வைத்து வருகின்றது. 80களில் இலங்கையில் இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு, வொயிஸ் ஒப் அமெரிக்கா வானொலி நிலையம் போன்றவை அமைக்கப்பட்ட போது, இவை அனைத்துமே  இந்தியாவை வேவுபார்க்க பயன்படுவதாக வெளிப்படையாக விமர்சித்தது. 


அதுமட்டுமல்ல  திருகோணமலை எண்ணெய் குதங்களை அமெரிக்காவிற்கு கொடுக்க தீர்மானம் எடுப்பதாகவும், திருகோணமலை துறைமுகமும் அமெரிக்காவிற்கு தாரைவார்க்கப்படுவதாகவும் கூறிய இந்தியா, இவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும் எனவும் இலங்கைக்கு வலியுறுத்திய வரலாறுகள் உள்ளன. இப்போதும் சீனா இலங்கையில் தடம் பதித்து இந்தியாவை கண்காணித்துக்கொண்டுள்ளது என்ற அச்சமும் இந்தியாவிற்கு உள்ளது.


அதேபோல், சீனாவுக்கும் இந்த கப்பல் விவகாரத்தில் மன வருத்தங்கள் இல்லாமலில்லை, குறித்த நாளில், சீனாவால் இலங்கைக்குள் வரமுடியவில்லை என்பதை தாண்டி அவர்கள் நினைத்தால் போல் வரமுடியவில்லை என்பதில் சீனா மிகப்பெரிய மன வருத்தத்தில் உள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். இதில் முக்கியத் தரப்பான இலங்கைக்கு இரு பக்க தலைவலியே ஏற்பட்டுள்ளது.  இவ்விரு நாடுகளுடனும் கையாண்ட சர்வதேச தொடர்பானது முறையாகவும் நேர்த்தியாகவும் அமையவில்லை. உலக நாடுகளுடன் கணக்குவழக்குகளை கையாளும் போது,  பொறுப்பில்லாது நடந்துகொள்ள முடியாது அல்லவா. அதுவும் பெரிய நாடுகளுடன் இலங்கை இவ்வாறு முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. 


இதில் நாம் எடுக்கும் சகல தீர்மானங்களும்  இலங்கையின் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட காரணிகளாகும்.  யுவான் வாங் 5 கப்பலின் வருகையுடன் இலங்கையின் வெளியுறவு கொள்கை தொடர்பிலும், நாம் எமது அண்டைய நாடுகளுடன் இராஜதந்திர ரீதியில் கையாளும் கணக்கு வழக்குகள் தொடர்பிலும் மிகப்பெரிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதேபோல் இலங்கை இப்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையுடன்  இந்த சம்பவமானது பாரதூரமான நெருக்கடியை உருவாக்கும் என்பதை மறுக்க முடியாது.  இவ்வாறான நிலைமைகளில் நாம் செய்யும் சிறிய தவறு கூட அடுத்ததாக இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கை என அனைத்தையும் பாதிக்கும். ஆனால் உண்மையிலேயே இலங்கையின் இராஜந்ததிர உறவு வீழ்ச்சி கண்டுவிட்டது, அண்டை நாடுகளுக்கு இலங்கை மீதான சந்தேக பார்வையே உள்ளது என்பதை மறுப்பதற்கும் இல்லை. ஒரு காலகட்டத்தில் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் மதிப்பு உயரிய மட்டத்தில் இருந்தது, ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. அந்தளவுக்கு இலங்கையின் அரசியல் நிருவாகம் படுமோசமாகிவிட்டது. அசம்பாவிதம் இடம்பெற முன்னர் தடுக்கும் இராஜிதந்திர கொள்கைகள் மாற்றம்பெற்று சகல நாடுகளிடமும் மண்டியிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.


இந்தியாவின் சுதந்திரதின  நிகழ்வு இடம்பெறும் காலகட்டத்தில் இந்தியாவின் எதிரிகளை இலங்கைக்குள் வரவழைத்து இந்தியாவின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டுள்ளோம். ஒருபுறம் பாகிஸ்தானிய ஏவுகணை கப்பல் இலங்கையில் நங்கூரமிடப்படுகின்றது, மறுபக்கம் சீன உளவுக்கப்பல் வருகின்றது என்றால் இந்தியாவினால் எவ்வாறு பெருமூச்சு விடமுடியும். இவ்வாறான நிலைமைகளில் சிந்தித்து செயற்படும் கொள்கையை இலங்கை மறந்துவிட்டதா அல்லது சிந்திக்கும் ஆற்றலே இல்லையா என்ற விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டோம்.  


இராஜதந்திர நகர்வுகளை கையாளும் விடயத்தில் நாம் இன்னமும் கற்க வேண்டியள்ளது.  நாம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளையில் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் உரம் ஆகிய மிக அவசியமான உதவிகளை செய்துகொண்டுத்த இந்தியாவை எவ்வாறு இலங்கை பகைத்துகொள்ள முடியும்.  இந்த கப்பலின் வருகையுடன் அல்லது அதன் பின்னராவது இலங்கைக்கான உதவிகளை முழுமையாக நிறுத்தும் தீர்மானங்களை இந்தியா எடுக்க முடியும்.  இது இலங்கையின் உள்ளக விவகாரங்களில் கூட நெருக்கடியை ஏற்படுத்தும்.  ஆய்வு என்பதே உளவுபார்ப்பதுதான், அதற்கு மாற்று விளக்கமே கொடுக்க முடியாது. ஆகவே இந்த கப்பலின் வருகை கண்டிப்பாக இன்னொரு நாட்டின் திறனை ஆய்வு செய்வது மட்டுமேயாகும்.  


இப்போது யாரும் போரை விரும்பவில்லை, வெறும் வார்த்தை விளையாட்டுக்களில் கபடி ஆடிக்கொண்டுள்ளனர். ஆனால் விளையாட்டு வினையாக மாறலாம். இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய இந்தியா விரும்பாத எதனையும் இலங்கை செய்யக்கூடாது அவ்வளவு தான். அதேபோல் சீனா இந்த வலயத்திற்குள் முடக்கப்பட வேண்டும் என்பதே மேற்கு நாடுகளின் எதிர்பார்ப்பாகும். மறுபுறம் சீனாவோ தன்னை விஸ்தரித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.  இதில்இதில் எங்காவது ஒரு உரசல் ஏற்பட்டால் நிச்சயமாக அது போராகவே வெடிக்கும். எல்லாவற்றையும் தாண்டி இலங்கை இன்று எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கலில் சீனாவை எதிர்க்க முடியாது, சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு சீனா கண்டிப்பாக தேவைப்படுகின்றது.  மறுபுறம் இந்தியாவும் இலங்கைக்கு மிக முக்கிய நாடாகும். இந்த விடயத்தில் இலங்கை எந்தப்பக்கம் சாயப்போகின்றது, எவ்வாறு இராஜதந்திர ரீதியில் இரு வல்லரசுகளையும்  கையாளப்போகின்றது என்பது இலங்கைக்கு மிகப்பெரிய சவாலே. 





Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!