அச்சுறுத்தல் வலயத்தில் பயணிக்கிறோம் ..
அச்சுறுத்தல் வலயத்தில் பயணிக்கிறோம் ..
இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இப்போதாவது கண் திறந்து பார்க்காமல் போவீர்கள் என்றால் பயங்கரமான ஆபத்துக்களை சந்திக்க நேரிடும். ஒரு நாட்டின் பொருளாதாரம் நாசமாகும் போதுதான் போராட்டங்கள் வெடிக்கின்றன. கல்வி, வேலை வாய்ப்புகள் குறையும் போதுதான் கலவரங்கள் அரங்கேறுகின்றன. கடந்த காலங்களில் இலங்கையின் நிலைமையும் இவ்வாறானதே. பொருளாதார நிபுணர்களின் கருத்துகளுக்கு அமைய இலங்கை அதன் இறுதி மூச்சை சுவாசித்துக்கொண்டிருப்பதாகவே கூறுகின்றனர். நாட்டுக்கு அவசியமான எரிபொருள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பின்னர் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனுடன் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்புமே வீழ்ச்சியடையும்.
கடந்த சில மாதங்களாக அதனை கண்முன்னே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தலைகளை மாற்றினால் நாட்டின் நிலைமை தானாக மாறும் என்ற நிலைப்பாடும் இல்லாமலில்லை. ஆட்சி மாறினால் அனைத்துமே ஒரு கட்டமைப்பின் கீழ் வரும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. அரசியல் ஸ்திரத்தன்மை உருவாகினால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கலாம் என்பதே கணிப்பாகும். பல நாட்கள் போராட்டத்திற்கு பின்பு வன்முறைகள், அடக்குமுறைகள் என பலவற்றைக் கடந்து இப்போது புதிய ஜனாதிபதியின் கீழ் புதிய பிரதமர் உள்ளடங்கிய அரசாங்கம் உருவாகினாலும் கூட நாட்டின் பொருளாதார பிரசினைகள் இருப்பதை விடவும் மோசமாக நகர்ந்துகொண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வெளிநாட்டு கையிருப்பை தக்கவைத்துக்கொள்ளவோ அல்லது அதிகரிக்கவோ முடியாதுள்ள இந்த நேரத்தில் மத்திய வங்கி பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இது தேசிய வங்கிக்கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையை மத்திய வங்கி தொடர்ச்சியாக விடுத்து வருகின்றது. இருந்ததை விடவும் மோசமான பொருளாதார நெருக்கடியையே புதிய அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. இதனை கூடிய விரைவில் ஜனாதிபதி ரணில் வெற்றிகொள்ள வேண்டும்.
இல்லையேல் முன்னைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் நேர்ந்த கதியே இவருக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கை இப்போது கடன்களை நம்பி காலடி எடுத்துவைக்கும் நாடாக மாறிவிட்டது. யாராவது கடன் தரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இலங்கையிடம் உள்ளது. இம்மாத நடுப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டாலும் கூட, இன்றைய சூழ்நிலையில் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிதி கிடைத்தவுடன் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமும் புதிய கடன்களை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தன. ஆனால் உலக வங்கி எமக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து எம்மால் இந்த நிதிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளது. போதிய பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரையில் இலங்கைக்கு எந்தவொரு நிதி உதவிகளையும் செய்வதில்லை என அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். அதாவது அனாவசிய சகல செலவுகளையும் முழுமையாக நிறுத்திவிட்டு, அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியை 5-6 வீதத்திற்கு கொண்டுவர வேண்டும்.
அதேபோல் அளவுக்கு அதிகமான கடன் சுமையை மத்தியவங்கி சுமந்துகொண்டுள்ளது. அதனையும் குறைத்தாக வேண்டும். உலக வங்கியும் இதனையே சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இது குறித்து அரசாங்கமோ ஜனாதிபதியோ கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல சர்வதேச நாணய நிதியம் எமக்கு புதிய கடன் நிதியை பெற்றுகொடுக்கும் பட்சத்தில் எமது தேசிய மற்றும் சர்வதேச கடனை மறுசீரமைப்பை செய்தாக வேண்டும். இலங்கை சுமார் 24 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச இருதரப்பு கடனாக செலுத்தவேண்டியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத தேசிய -சர்வதேச கடனானது 69 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதனை எம்மால் செலுத்த முடியாத நிலைமையில் உள்ளோம். இவற்றில் இருதரப்பு கடன் மறுசீரமைப்பை செய்யவேண்டுமாயின் பாரிஸ் கிளப் அமைப்பின் ஊடாகவே அதனை கையாள வேண்டிவரும். எனினும் எமது பிரதான கடன் வழங்குனர்களான சீனா மற்றும் இந்தியா ஆகியவை பாரிஸ் கிளப் அமைப்பின் உறுப்பு நாடுகள் அல்ல. ஆகவே இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் போதும் சீனாவை இதற்குள் கொண்டுவந்தாக வேண்டியது கட்டாயமாகும். அண்மையில் ஐ.எம்.எப் பிரதிநிதிகள் கூட கடன் மறுசீரமைப்பில் சீனாவை இணக்கத்திற்கு கொண்டுவருமாறு இலங்கையை வலியுறுத்தியிருந்தனர்.
உண்மையிலேயே சீனாவுக்கு இவ்வாறான வேலைத்திட்டங்கள் பிடிப்பதில்லை. அவர்கள் இதுவரை காலமாக அவ்வாறான எந்தவொரு ஒத்துழைப்பையும் தமது கடனாளிகளுக்கு செய்து கொடுத்ததுமில்லை. குறிப்பாக சொல்லப்போனால், அவர்கள் கடன்களை வெட்டுவதில்லை, அதற்கு பதிலாக புதிய கடன்களை கொடுத்து பழைய கடன்களை முழுமையாக செலுத்திவிட்டு புதிய கடன்களை கொண்டு செல்லுங்கள் என்பதே அவர்களது நகர்வாகும். எனினும் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் அண்மையில் சம்பியாவிற்கு (zambia) சீனா இணக்கம் தெரிவித்துள்ள காரணத்தினால் இலங்கைக்கும் அவ்வாறான வாய்ப்புகளை சீனா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எது எப்படியானாலும், அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கை ஏதேனும் இணக்கத்தின் மூலமாக தீர்வு கண்டால் மாத்திரமே அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவிலேனும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு நிதி உதவி கிடைத்தாலும் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியே கிடைக்கும். காலம் தாழ்த்தப்பட்ட கடன் தொகையாக 3200 மில்லியன் டொலர் ஒதுக்கப்படும். அதில் உடனடியாக 400 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும். அப்படியென்றால் ஜனவரி மாதமளவில் 1200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். ஆனால் அதுவரை காலத்திற்கு எமக்கு 5000 மில்லியன் டொலர் செலவுக்காக தேவைப்படுகின்றது. அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதே எமக்குள்ள மிகப்பெரிய சவாலாகும். இதனை ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இன்றுள்ள நிலைமைகளின் அடிப்படையில் உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து ஆசிய அபிவிருத்தி வங்கியும் இதே எச்சரிக்கையை விடுத்தால் எம்மால் இவர்களிடம் இருந்து கடன்களை பெற்றுக்கொள்ள முடியாது போகும். அவ்வாறான நிலையில் இருதரப்பு கடன்களையே நாடிச்செல்ல நேரிடும். கடன்களை நாடிச்செல்வதென்றால் ஒன்று மேற்கு பக்கமாக செல்லவேண்டும்.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் கரம் நீட்ட வேண்டும். ஆனால் அங்குதான் புதிய சிக்கல்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் பொதுவாகவே மனித உரிமை மீறல்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தும் நாடுகளாகும். இந்த விடயங்களில் இப்போதும் இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துக்கொண்டுதான் உள்ளனர். துரதிஷ்டவசமாக புதிய ஜனாதிபதியும், அரசாங்கமும் இன்னமும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தவில்லை. இலங்கை தீவுக்குள் நடப்பது எதுவுமே தீவுக்கு வெளியில் தெரியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனரோ என்னவோ. ஆகவே இந்த நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் அதிருப்தியில் உள்ள காரணத்தினால் இவர்களிடம் இருந்து கடன்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.
சரி இந்தியா உள்ளதே,எப்போதும் போல கேற்போம் என்றால் அதற்கும் இனி சாத்தியமில்லை. இந்தியாவும் அண்மைக்காலமாக இலங்கையை போன்ற மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்ததை விடவும் வேகமாக இந்தியாவின் கையிருப்பு குறைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இந்தியா எமது சுமையையும் சேர்த்து சுமக்கப்போவதில்லை.
ஆகவே எமக்குள்ள ஒரே தெரிவு சீனாவுடன் இணங்கி செல்வது மட்டுமேயாகும். கடன்களுக்காக சீனாவை நாம் முழுமையாக நாடுவது வேறு விதமான பூகோள அரசியல் நெருக்கடிகளுக்கு எம்மை கொண்டு செல்லும். இந்த நிலைமைகளை புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் சரியாக கையாள வேண்டும். இலங்கை இப்போது எச்சரிக்கை வலயத்தில் பயணித்துக்கொண்டுள்ளது. இதில் பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது பூகோள அரசியல் ரீதியிலான நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
Comments
Post a Comment