அரச நிறுவனங்களில் கட்டாயமாகும் நடைமுறை - விசேட சுற்று நிருபம் வெளியீடு
அரச நிறுவனங்களுக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே விசேட சுற்று நிருபமொன்றை விடுத்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கு மக்கள் சமர்ப்பித்துள்ள பிரச்சினைகள் மற்றும் விசாரணைகளுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல்களை கையாள அதிகாரி நியமிக்க வேண்டும்
இதன்படி, அரச நிறுவனங்களால் பெறப்பட்ட கடிதத்திற்கு இறுதிப் பதில் வழங்க முடியாத பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் கடிதம் கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடைக்கால பதில் அனுப்பி, இறுதிப் பதிலை வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பதில் கடிதத்தின் கையொப்பத்திற்குக் கீழே விடயத்திற்குப் பொறுப்பான பணியாளர் அதிகாரியின் நேரடி தொலைபேசி எண், தொலைநகல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கட்டாயமாகும்.
அரசு அலுவலகங்களின் பொது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை தினமும் சரிபார்த்து, அதற்கென ஒரு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பணியாளர் அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை தினமும் சரிபார்க்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல்களுக்கு அன்றைய தினம் பதில் அளிக்க அரசு அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், அந்த நேரத்தில் இறுதி பதில் அளிக்க முடியாவிட்டால், அதற்கான திகதியை குறிப்பிட்டு இடைக்கால பதில் அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயமான நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்
அரசு அலுவலகங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டவரின் பெயர், பதில் அனுப்ப வேண்டிய விஷயம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, பதிலளிக்க கடினமாக உள்ள விடயங்கள் தொடர்பில் உரிய ஊழியர்கள் அல்லது விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் நியாயமான நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதற்கு தங்கள் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பதை விட, பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்க பொது நிறுவனங்களின் அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் செயலாளர் கூறுகிறார்.
Comments
Post a Comment