22 ஆவது திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் இவ்வார இறுதியில் கிடைக்கப்பெறும் – விஜயதாஷ ராஜபக்ஷ

 அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றின் வியாக்கியானம் இவ்வார இறுதியில் அல்லது எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெறும். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றம் அடுத்தக்கட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கும். 

நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணையாவிடின் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் தவறான நிலைப்பாடு மேலும் உறுதிப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஷ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்குவதற்காகவும்,பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை நிலையாக செயற்படுத்த அடித்தளமிடுவதற்காகவும் இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டுக்கு தேவையான கொள்கை மற்றும் சட்டத்தை இயற்றுவுதம்,நாட்டு மக்களுக்கான நிதி அதிகாரம் மற்றும் சுயாதீன தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவது பாராளுமன்றத்தின் பிரதான கடமையாகவுள்ளன.

நாட்டின் நிதி முகாமைத்துவம் தவறாக செயற்படுத்தப்பட்டுள்ளது என்பது புதியதொரு விடயமல்ல,அவ்விடயம் குறித்து உரையாற்றி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு தரப்பினர் 74 வருடகாலத்தையும் சபிக்கிறார்கள்.

1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து தேசபிதா டி.எஸ் சேனாநாயக்க தொடக்கம் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் மக்கள் பெரும் அசௌகரியங்களையும்,நெருக்கடிகளையும் எதிர்கொண்டார்கள்,நிலையான முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

அப்போதைய காலக்கட்டத்தில் மூடிய பொருளாதார கொள்கையினை கடுமையாக விமர்சித்து திறந்த பொருளாதார கொள்கையினை முன்வைத்து அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போது திறந்த பொருளாதார கொள்கையினை நாமும் விமர்சிக்கிறோம்.திறந்த பொருளாதார கொள்கையில் ஒருசில குறைப்பாடுகள் காணப்பட்டாலும்,சாதகமான அம்சங்களும் காணப்பட்டன.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஒருசில அதிகாரங்கள் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக பாராளுமன்றத்திற்கு வசமாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்றத்தின் பெரும்பாலான அதிகாரங்கள் நிறைவேற்றுத்துறையிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளை அனைவரும் நன்கு அறிவோம்.

நிறைவேற்று அதிகாரத்தின் தனி தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணியாகும்.பொருளாhதார நெருக்கடி தொடர்பில் கோப் குழு பல விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளது.

செயற்படுத்தப்பட்ட ஒருசில அபிவிருத்தி திட்டங்களினால் எவ்வித பயனும் நாட்டுக்கு கிடைக்கப்பெறவில்லை அத்துடன், முறையற்ற வெளிநாட்டு கடன் கடன் சுமையினை தீவிரப்படுத்தியுள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெற்றுக்கொண்ட வெளிநாட்டு கடனை மீள செலுத்த முடியாத காரணத்தினால் அம்பாந்தோட்டை துறைமுகம் பிற தரப்பினருக்கு சொந்தமானது. உலக பலம் வாய்நத தரப்பினரது பனிபோருக்கு மத்தியில் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு அது சீனாவிற்கு வழங்கப்பட்டது. 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அன்று முன்னெடுத்த தீர்மானமும் ஒரு காரணியாக உள்ளது இவ்வாறான பின்னணியில் தான் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இவ்வார பகுதியில் அல்லது எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப்பெற்றவுடன் மக்கள் பிரதிநிதிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் பிரநிதிகள் ஒன்றிணையாவிடின் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் வெறுப்பான நிலைப்பாடு தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!